விடியலைத்தேடி

build2

இருளில் பாதை தொலைந்த பாலைவனத்தில் வழி தேடி அலைவதுதான் வெளிநாட்டு வாழ்க்கை. படிக்கும் போது பட்ட கடனுக்காகவும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வேறு வழி இல்லாமல் பல ஆயிரம் மைல்கள் கடந்து உறவுகள் அனைத்தையும் விட்டு விலகி ஒரு வெளிநாட்டில் வனவாசம் புகுந்தேன் என்றே சொல்ல வேண்டும். பணம் என்னும் காகிதத்தைத்தேடி வந்த எனக்கு வாழ்க்கை பெரிய பாடத்தை கற்று கொடுத்துவிட்டது என்றால் மிகையாகாது. இளமை தொலையப்போவத்தை அறியாமல், உழைக்கும் வயதுதானே என எண்ணி என்னுடைய இருப்பத்திரெண்டு வயதில் விமானம் ஏறி வந்துவிட்டேன். இங்கு வந்த பிறகுதான் இயந்திர வாழ்க்கை என்ன என்று தெரிந்தது. பன்னிரெண்டு மணி நேர உழைப்பு, குறிப்பிட்ட நேரத்தில் தான் உணவு, இருக்கை முதல் இருப்பிடம் வரை  பல்வேறு வரைமுறைகள், பறக்க எண்ணி இருப்பதை தொலைத்து, இறக்கை இழந்த கதைதான். தனிமையான உலகம், பசி என்றவுடன் உணவு பரிமாற தாய் இல்லை. நமக்கு நாமே தான் சமைத்து சாப்பிட வேண்டும். இரவில் தாமதமாக வந்தால் திட்டுவதற்கு இங்கு தந்தை இல்லை, சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள என் சகோதரி இல்லை, அடித்து விளையாட என் சகோதரன் இல்லை, அழுதால் கண் துடைக்க என் தோழியின் கைகள் இல்லை, கஷ்டம் வந்தால் சாய்ந்து கொள்ள என்  நண்பன்  இல்லை, ஆசை பட்டவர்களை உடனே பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லை, நினைத்ததை நினைத்த நேரத்தில் சாப்பிட வழியில்லை, அருகில் இருப்பவனுக்கு ஆறுதல் சொல்லத்தெரியவில்லை. நல்ல நாள்,  பண்டிகை நாள், திருநாள் என எந்த நாளும் கிழமையும் அறியவில்லை. என் தனிமையின் கொடுமை தீரவில்லை. வெளிநாட்டில் தன் மகனுக்கு ராஜ வாழ்க்கை என நம்பும் என் பெற்றோருக்கு பொய்யான தொலைபேசி உரையாடல். பல இரவுகள், தாயின் மடியில் படுத்துறங்கியதை நினைக்கையில் கண்ணீர் துளிகளால் தலையணை தான் என்னவோ ஈரமாகிறது. அகதியாய் அந்நிய மண்ணில் வாழ்பவர்களின் நிலையை அந்நிய மண்ணில் உணர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறேன். இருபத்து எட்டு வயதில் எனக்கு பெண் தேட ஆரம்பித்து, வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் வேண்டாம் என பலர் ஒதுக்கித்தள்ள, என்னுடைய முப்பத்தி மூன்றாம் வயதில் ஒரு பெண்ணை கரம் பிடித்தேன். ஒரு மாத காலத்தில் அவளை விட்டு வெளிநாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை. என் பிள்ளையின் முகத்தைக் கூட இணையம் மூலம் பார்க்க வேண்டிய அவலம். இன்று என் மகன் வேலைக்கு செல்லும் வயதை அடைந்துவிட்டான்  நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கிறேன். என் இளமையும், கனவுகளும் வெளிநாட்டு வாழ்க்கையின் இருளில் களைந்துவிட்டன. என் வாழ்க்கைக்கு விடியல் எப்பொழுது என காத்திருக்கிறேன்…

Advertisements

தாயானவள்

Fast-Shipping-Hand-painted-Oil-Painting-Art-Abstract-Mother-Son-Moon-Painting-Acrylic-Canvas-For-New

கருவுற்ற காலத்திலே பல கனவுகளை கொண்டவள். மரண வலி ஏற்படுத்தி பெற்றெடுத்த பிள்ளையை மகிழ்வுடன் நோக்கியவள். தன் அழகு மொத்தத்தையும் பிள்ளை பெற்றெடுக்க தியாகம் செய்பவள். தன் பிள்ளை இரவில் தூங்க தன் தூக்கத்தை தொலைப்பவள். தன் பிள்ளைக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவள். தன்னிகரில்லா அன்பை பொழிபவள்.  தன் குழந்தை செய்யும் சேட்டைகளை பிறரிடம் சொல்லி வியப்பவள். தன் பிள்ளைக்கு பிடித்த உணவு தனக்கு செய்யத் தெரியாவிடினும் பிறரிடம் சமையல் குறிப்புகளை கேட்டு அன்புடன் சமைத்து தருபவள். தன் குழந்தை சிறந்த கல்வி கற்க பல பள்ளிகளை ஆய்வு செய்பவள். குழந்தை பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் ஆசானாய் மாறுபவள். தன் குழந்தைக்கு முழு சுதந்திரம் தருபவள். பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லாத போது மிகுந்த கவலை கொள்பவள். தன் பிள்ளை கண்ணீர்விடும் போதெல்லாம் அவள் இதயம் உடைந்து நொருங்கும். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அவளுக்கு அது முதலிடமாகவே தோன்றும். பிள்ளைகள் வளர்ந்த பிறகும் அவர்கள் செய்த குறும்புகளை அவர்களிடம் சொல்லி இன்புறுபவள்.

தன் பிள்ளைகள் ஒரு வயதை அடைந்த பிறகு அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை மறக்கிறாள். கடிந்த கணவனிடம் அவள் வாழக்காரணம் தன் பிள்ளைகள் என்பதை ஒவ்வொரு முறையும் நினைவூட்டுவாள். வெளியே சென்ற பிள்ளை வீடு வர தாமதமானால் குறைந்தது இருபது முறையேனும் தொலைபேசியில் அழைப்புவிடுத்திருப்பாள். சூரியன் உதிக்கும் முன் எழுவாள், நடு இரவில் உறங்கச் செல்லுவாள். அதற்கிடையில் பத்து முறையேனும் எழுந்து தன் பிள்ளைகள் உறங்குகிறார்களா என பார்த்துக்கொள்வாள். பிள்ளைகள் வேலைக்கோ, கல்லூரிகோ செல்லும் முன் உடைகளை இஸ்திரியிட்டு உணவு சமைத்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்கிறாள். தன் குடும்பதிற்காக ஓயாது உழைக்கிறாள்.

இவ்வாறெல்லாம் பார்த்துக் கொண்ட தாயை நாம் எவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? நாம் அவர்களுக்கு இன்பத்தை தராவிட்டாலும் பரவாயில்லை, துன்பத்தை தந்துவிடக்கூடாது. தாயில்லாப் பிள்ளைகளிடம் கேட்டுப்பாருங்கள் தாயின் அருமை தெரியும். அவளை முதியோர் இல்லத்தில் தள்ளுவதை தவிர்த்து அன்பாய் இல்லத்தில் வைத்து பார்த்துக்கொள்ளுங்கள். அவள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை எவ்வித கைம்மாறாலும் ஈடுசெய்ய முடியாது  என்பதே நிதர்சனம்.

உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

 

ஆண்களின் முதல் காதல்

Cool-Harley-Davidson-Wallpaper-48599.jpgஅண்ணே புது பைக்கா?? எவ்ளோ? எவ்ளோ ஸ்பீட் போகும்?. மச்சி எத்தனை சிசி டா?? மச்சி எனக்கு ஒரு ரவுண்டு டா இப்படி ஒரு பைக்கை பார்த்தவுடனே கேட்டுவிடுகின்றனர். நான் ஒரு பைக் வாங்கனும். என்னுடைய பைக்கில் சவாரி செய்யனும். நான் எங்கு செல்ல விரும்புகிறேனோ அங்கெல்லாம் எனது பைக்கில் சவாரி செய்ய வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்களிடம் கூறாத ஆண் பிள்ளைகளே இருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அப்பாவின் பைக்கை ஓட்ட ஆசைப்படுவதிலிருந்து பைக்கின் மீதான மோகம் ஆரம்பிக்கிறது. மீசை கூட முளைக்காத வயதில் தான் இவர்களது முதல் காதல் ஆரம்பமாகிறது. இளம்வயதிலேயே வீட்டின் அறை முழுவதும் பைக்கின் புகைப்படங்களை ஒட்டி அழகு பார்க்கிறார்கள். தனக்கு பிடித்த பைக்கை வாங்க இவர்கள் பத்து வயதில் இருந்தே பணம் சேர்க்கிறார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தொலைக்காட்சி விளம்பரங்களில் பைக் செல்லும் வேகத்தை பார்த்து உடலில் உள்ள ரோமங்கள் சிலிர்த்துக்கொள்ளும். எப்படியோ கஷ்டப்பட்டு அடிபட்டு உதைபட்டு கனவு வாகனத்தை வாங்கிவிட்டு அதனிடம் காதலை வெளிப்படுத்தும் விதம் அமர்க்களம் தான். கடையிலிருந்து பைக் வாங்கிய அந்த நொடி முதல் பத்து நாளைக்கு வண்டி எண் கூட பதியாமல் சுற்றுவது ஒரு விதமான தனி இன்பத்தை தருகிறது. இருசக்கர வாகனம் தான் ஆனால் காற்றில் மிதக்க வைக்கிறது, வளைவுகளில் உலா வருகிறது, மன அழுத்தத்தை நிவாரணம் செய்கிறது, பல கஷ்டமான சூழ்நிலையில் பைக் பயணங்கள் தான் முடிவுகள் எடுக்க தைரியம் தருகிறது. எத்தனை முறை விழுந்து வாரினாலும் மீண்டும் முன்னிருந்த அதே துடிப்புடன் தான் பயணம் செய்ய தூண்டுகிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பைக்குடன் ஒரு நல்ல உறவு வேண்டும். அதற்காக பைக்கின் நிலைகளை புரிந்துகொள்ள எடுத்து கொள்ளும் முயற்ச்சிகள் ஏராளம். அது வேடிக்கையானது என்று தெரியும், ஆனால் அது தான் உண்மை என்று பைக் பிரியர்கள் விளக்கம் தருகிறார்கள்.

motor-background-2.jpg

இவ்வாறு பல கற்பனைகளுடனும் கனவுகளுடனும் அடைந்த முதல் காதல் பயணம் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டாமா? வேகத்தை வெல்வதாக எண்ணி பலர் உயிரை மாய்த்து கொள்கிறார்கள். வாழ்க்கை தான் வேகத்தை வெல்ல வேண்டுமே தவிர வேகம் நம் உயிரை வென்று விடக்கூடாது. வேகம் சிலிர்ப்பை தரலாம் ஆனால் அதே வேகத்தினால் தான் உடல் எலும்புகள் சில்லாக நொருங்கும் என்பதே நிதர்சனம். அன்புடன் சவாரி செய்யுங்கள், மிதமான வேகத்தில் செல்லுங்கள், தலைகவசம் அணிந்து கொள்ளுங்கள்.

பயணங்கள் தொடரட்டும்…

அன்பிற்குரியவனே…

ஆணின் திருமணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு ஆனால் ஒரு பெண்ணுக்கோ அது மாற்றம். அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம். அவள் வாழ்க்கை முழுவதையும் உங்களுக்காக அர்ப்பணித்து உள்ளாள். சமைப்பது, சுத்தம் செய்வது, உங்களை பெற்றவர்களை பார்த்துக்கொள்வது, உங்களால் பிறந்த பிள்ளைகளை பார்த்துக்கொள்வது, போன்ற பல பணிகளை செய்து கொண்டு தான் இருக்கிறாள். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றுகிறாள். உங்களை எப்பொழுதும் மகிழ்வுடன் வைத்திருக்கிறாள். அவளுடைய உடல் நலத்தை தியாகம் செய்து உங்களுக்காக மாடு போல உழைக்கிறாள்.

உங்களிடம் அவள் எதிர்பார்ப்பது மிக குறைவு தான். அவளுக்காக நேரம் செலவிடுங்கள் அது அவளுக்கு பொக்கிஷமாக தெரியும். உடல்நிலை சரியில்லாத போது பார்த்துக்கொள்ளுங்கள் அது அவளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். அவளை தைரியப்படுத்துங்கள் உங்களை ரசிப்பாள். அவளுடன் சேர்ந்து சில வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அவளுக்கு அது ஆறுதல் தரும். அவளுடன் சேர்ந்து உணவு உண்ணுங்கள் அவளுக்கு தனிமை உணர்வு விட்டுபோகும். அனைத்துக்கும் மேலாக பணிச்சுமைகளை வீட்டு வாசலில் செருப்புடன் சேர்த்து கழற்றி விட்டுச்செல்லுங்கள் அவளுக்கு அது ஆனந்தத்தை தரும். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகை அவளுடைய பொழுதுபோக்கு, அழகு, உடல்நிலை அனைத்தையும் இழந்து பெற்றது என்பதே நிதர்சனம்.

மனைவி என்பவள் வாழ்வின் நிகரில்லா செல்வம் அவளை பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.